#I Movie – A review on all the reviews! Where does the film really stand!?

I 2
ஷங்கர் படங்களுக்கே உரிய எக்கச்சக்க எதிர்பார்ப்பு, உலகளவில் மிகப்பெரிய opening என ஆரவாரமாக ரிலீசாகியுள்ளது விக்ரம் நடிப்பில் உருவான ‘#ஐ’. ‘Mixed Review’ என்பது ஷங்கர் படங்களுக்கு புதிதல்ல. கிட்டத்தட்ட 1999ஆம் ஆண்டில் வெளிவந்த ‘முதல்வன்’ திரைப்படத்திற்கு பிறகு, ஷங்கர் இயக்கிய எல்லா படங்களுமே இது போல Mixed Reviewக்களை தாண்டித்தான் வந்துள்ளது. ‘பாய்ஸ்’ திரைப்படத்தை கழுவி ஊற்றினர் பல முன்னணி பத்திரிக்கைகள். ‘அந்நியன்’ எதிர்பார்த்த அளவில்லை, ‘ஜென்டில்மேன்’-‘இந்தியன்’ படங்களின் வாடை அதிகமாக இருக்கிறது என்றனர். ‘சிவாஜி’ படத்தில் ரஜினி ஜெயித்துவிட்டார், ஷங்கர் தோற்றுவிட்டார் என்றே பெரும்பான்மையான பத்திரிக்கைகள் கூறின. ‘எந்திரன்’ படத்திற்கு வந்த விமர்சனங்கள் ரொம்பவே வித்தியாசமானவை. ‘நண்பன்’ படத்தை ஆரம்பித்தபொழுதிலிருந்தே, ‘ஷங்கர் ஏன் ரீமேக் படம் பண்ண வேண்டும்?’ என்கிற கேள்வி அவரை துரத்தியது. இத்தனையையும் தாண்டி, பெரும்பான்மையான அவரது படங்கள் வணிகரீதியாக வெற்றிபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது; மக்களும் ரசித்துக்கொண்டுதான் இருக்கிறது.

இருப்பினும், ‘ஐ’ படத்தைப் பொறுத்தவரையில், படத்தின் மீதான குறைகளை விட ஷங்கர் மீதே அதிக குறைகள் கூறப்படுவதாகத் தோன்றுகிறது. (அதாவது, படத்தின் கதை-திரைக்கதை பற்றிய குறைகளை விட, ஷங்கர் முன்பை போலில்லை.. ஷங்கர் விக்ரமின் உழைப்பை வீணடித்துவிட்டார் என்பது போல்). ஆன்லைன் ரசிகர்களும், மீடியாக்களிலும் ஒரு சிலர் ஷங்கரை ‘ஜீனியஸ்’, ‘கலக்கிப்புட்டாரு’ என்றெல்லாம் தலையில் தூக்கிவைத்து கொண்டாடிக்கொண்டிருக்க… இன்னொருபுறம் ‘100ரூபாய்க்கு worth இல்ல’, ‘இதையா, 3 வருஷமா எடுத்தாரு?’ என்று கடுப்பாகின்றனர் சிலர். இவர்களுக்கு மத்தியில், ‘படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை’ங்கிறது உண்மைதான்; ஆனா, நல்லாவேயிருக்கு’ என்கிறது ஒரு குரூப்’பு. நேற்று முன்தினம் கூட ஒரு சினிமா பிரபலம் ஒருவரும் நானும் ‘ஐ’ திரைப்படம் குறித்து நீண்ட நேரம் விவாதித்து கொண்டிருந்தோம். படம் நல்லாதான் இருக்கு என நானும், ஏமாற்றமளிக்கிறது என அவரும் வெவ்வேறு வாதங்களை முன்வைத்து பேசிக்கொண்டிருந்தோம். உண்மையிலேயே, படம் நல்லாயிருக்கா இல்லையா? ஏன் இத்தனை mixed response?

டிரைலரும், பாடல்களும் தந்த நம்பிக்கையினால் படம் வருவதற்கு முன்னரே, ‘எப்படியும் நல்லாதான் இருக்கும்’ என்று நம்பி 2 முறை பார்ப்பதற்கு டிக்கெட் புக் செய்துவிட்டேன். வில்லிவாக்கம் AGSஇல் காலை 6 மணிக்காட்சி; முதல் முறை பார்த்தபொழுது நிறைய குறைகள் தெரிந்தாலும், ஓட்டுமொத்தமாக எனக்கு படம் திருப்தி அளித்தது. நான் கொடுத்த 120ரூபாய் வீணாகவில்லை என்கிற feeling; ‘என்னடா, அவசரப்பட்டு  ரெண்டு தடவை பார்க்க டிக்கெட் புக் பண்ணிட்டோமே’ என்ற எண்ணமும் வரவில்லை. இரண்டாம் முறை ஈகா தியேட்டரில் இரவுக்காட்சி. விடுமுறை தினம் என்பதால், அரங்கம் முழுக்க ஃபேமிலி ஆடியன்ஸ் மட்டுமே. இரண்டு தியேட்டரிலுமே ஆடியன்ஸிடம் மிக நல்ல ரெஸ்பொன்ஸ்; இயக்குனர் எந்தெந்த இடங்களில் கைதட்டல் வரவேண்டும், எங்கெங்கே ரசிகர்கள் ஃபீல் பண்ணவேண்டும் என்று நினைத்தாரோ அது சரியாக நடந்ததாகவே தோன்றியது. இரண்டாம் முறை பார்த்த பொழுது, முதல் தடவை ரசித்த காட்சிகளும் விஷயங்களும் இன்னும் அதிகம் ஸ்பெஷலாக தெரிந்தது; அதே சமயம், முதல்முறை பார்த்தபொழுது பிடிக்காத விஷயங்களும், அயர்ச்சி அளித்த காட்சிகளும் இன்னும் கூட பிடிக்காமல் போயின, கடுப்படித்தன. ஓகே… ‘ஐ’ படத்தில் நான் ரசித்த விஷயங்களும், பிடிக்காமல் உறுத்திய மைனஸ் பாயிண்ட்களும், பெரும்பாலான மக்கள் ‘ஐ’ படத்திலுள்ள ‘மைனஸ்’ என கூறுபவையும் அவை குறித்த என் கருத்துக்களும் இனி கீழே…

படத்தின் நீளமும், மிக மெதுவாக நகரும் திரைக்கதையும்:
இன்று ரிலீசாகும் 80% படங்கள் இரண்டரை மணி நேரத்திற்கும் குறைவாக ஓடுகையில், மூன்று மணிநேரத்திற்கும் மேல் ஓடும் ‘ஐ’ படத்தின் நீளம்தான் படத்தின் மிக முக்கியமான மைனஸ். படம் மட்டுமல்ல, ஆரம்பம் முதல் இறுதி வரை படத்தின் ஒவ்வொரு காட்சியுமே அத்தனை நீளம். அது போக, அவ்வப்போது மாறி மாறி ஒன்றன் பின் ஒன்றாக வரும் பாடல்களும் சண்டைக்காட்சிகளும் அலுப்பை ஏற்படுத்துகின்றன (4 சண்டைக் காட்சிகள், 6 பாடல் காட்சிகள்). எல்லா பாடல்களுமே கேட்கவும், பார்க்கவும் ரசிக்கும்படியுள்ளது உண்மை; ஒவ்வொரு சண்டைக்காட்சியும் unique ஆக ஒவ்வொரு ஸ்டைலில் வித்தியாசமாக உள்ளது. எல்லாம் சரி, ஷங்கர் சார். ஆனால், 3 மணிநேரத்திற்கு மேல் ஓடும் இப்படத்தில் ஒவ்வொரு பாடலும் சண்டையும் பெரிய speed breaker ஆகிவிட்டதே. அது போக, சீனா காட்சிகள் முழுக்கவே அப்படியொரு தொய்வு. ஒரு வேளை, ஸ்கிரிப்ட் எழுதுகையில் படத்தின் நீளம் குறித்து ஷங்கர் யோசிக்காமல் போயிருக்கலாம். ‘மிஸ்டர்.தமிழ்நாடு’ போட்டியில் வெல்வதன் மூலம் ஒரு வில்லன் உருவாகிறான், அவனுக்கு ஒரு fight. சீனாவில் லீயின் முகத்தில் ஆசிட் வீச முயற்சிக்கும்பொழுது ஒரு fight. வில்லன்கள் லீயை கடத்தும்பொழுது ஒரு fight. ஜான் துரத்தும்பொழுது ரயில் மீது ஒரு fight. ஒவ்வொரு சண்டைக்காட்சியுமே 10 நிமிடத்திற்கு குறையாமல் ஓடுகிறது (இது மட்டுமே 40 நிமிடம்!). நிச்சயமாக, இரண்டு சண்டைக்காட்சிக்கு மேல் அவசியமே இல்லை, இத்தனை பெரிய படத்தில். Editing டேபிளிலாவது இரக்கமின்றி சில காட்சிகளை வெட்டித் தள்ளியிருக்கலாமே, ஷங்கர். குறைந்தபட்சம், இக்காட்சிகளின் நீளத்தையாவது குறைத்திருக்கலாம். நன்றாக இருக்கிறது என்பதால், எல்லாவற்றையுமே ரசிகர்களுக்கு காட்டுவோம் என நினைத்தாரோ என்னவோ!? இங்குதான் தோற்றுபோய்விட்டார், எடிட்டர் அந்தோணி!

திரைக்கதையும், சுவாரஸ்யமற்ற திருப்பங்களும் காட்சிகளும்:
‘ஐ’ ஒரு சாதாரணமான பழி வாங்கும் கதைதான். ஹீரோவின் நிலையையும், தன்னை இந்நிலைக்கு ஆளாக்கியவர்களை அவன் பழி வாங்குகிறான் என்பதையும் படம் ஆரம்பித்த 20 நிமிடத்திலேயே இயக்குனர் சொல்லிவிடுகிறார். ரசிகர்களுக்கு அவர் வைக்கும் சஸ்பென்ஸ் ‘யார் லிங்கேசனை இப்படி ஆக்கினார்கள்?’, ‘ஏன்?’ என்ற கேள்வியும், லிங்கேசன் எப்படியெல்லாம் வித்தியாசமாக அவர்களை பழி வாங்குகிறான் என்பது மட்டும்தான். படம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் தொடங்கி படம் முடிவதற்கு 30 நிமிடம் முன்னால் முடியும் அந்த நீண்ட ஃபிளாஷ்பேக்கின் நடுவே அந்த சுவாரஸ்யம் கொஞ்சம் குறைவுதான் என்றாலும், எங்கும் அதிகம் போரடிக்காமல் எடுத்து சென்றுள்ளார் இயக்குனர். ஆனால், படத்தின் மிக முக்கியமான வில்லனும் அவரது பாத்திரப் படைப்பும் அவர் குறித்த ஒரு டிவிஸ்டை எல்லோராலும் முதல் 30 நிமிடத்திலேயே கணிக்கும்படி வைத்திருப்பது மிகப்பெரிய மைனஸ். அதே போல், ஜானின் தண்டனை ரயில் சம்பந்தப்பட்டது என்று hint’ம் கொடுத்துவிட்டு, கூனன் லிங்கேசனால் பெரிதாக பறந்து பறந்து சண்டை போட முடியாது என தெரிந்தும், ஏன் நீட்டி முழக்கி அப்படியொரு ரயில் சண்டை வைத்தார் என தெரியவில்லை. Generator’ஐ எரித்துவிட்டு பழி வாங்குதல், மருந்து கொண்டு வரும் Medical store வேலையாளை மறித்து மருந்தை மாற்றுவது என மிக முக்கியமான காட்சிகளில் கூட காணப்பட்ட convenient writing ஷங்கர் ரசிகர்களை நிச்சயம் ஏமாற்றும்! ‘நாங்க தான்டா உன்னை இப்படி ஆக்கினோம்’ என்று ஒவ்வொரு வில்லனும் கதை சொல்லும் 1990s ஸ்டைல் கூட, ‘இது மத்தவங்க படமாக இருந்தா பரவாயில்லை… ஷங்கர் படம்’ என சின்னதாக ஏமாற்றத்தை தந்தது.

ஆழமில்லாத காதல் காட்சிகள்:
ஷங்கர் படங்களில் எப்பொழுதுமே காதல் காட்சிகள் கொஞ்சம் average ஆகத்தான் இருக்கும் (இது மறுக்க முடியாத உண்மை!). இன்னும் சொல்லப்போனால், ஹீரோயின்கள் தான் அவர் படத்தின் வில்லிகளாக இருப்பர். கொஞ்சம் rewind செய்து பாருங்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த ஷங்கர் படங்களில் உங்களுக்கு பிடிக்காத காட்சிகள் ஹீரோயின்கள் வரும் காட்சிகளாக மட்டுமே இருக்கும் (Gentleman – மதுபாலா, Indian & முதல்வன் – மனீஷா கொய்ராலா, அந்நியன் – சதா); இப்பொழுது கூட டிவியில் பார்க்கும்பொழுது, காதல் காட்சிகள் தான் SKIP செய்ய தோன்றும். அதிலும், Gentleman மற்றும் Indian போன்ற படங்களில் இரண்டாம் கதாநாயகியின் skin-show மற்றும் அது குறித்த adult காமெடியும் முதல் பாதியை நகர்த்தி செல்வதில் பெரும்பங்கு வகிக்கும். ஆனால், ‘ஐ’ படத்தில் அப்படி வலுவில்லாத காதல் காட்சிகளை கொடுத்துவிட முடியாது; காரணம் – Romantic thriller ஆக இருந்தாலும், ‘ஐ’ படத்தின் உயிர் காதல் தான். ஆனால், லிங்கேசனுக்கும் தியாவிற்கும் காதல் ஏற்படும் காட்சிகள் படு செயற்கையாக உள்ளது. காதலிப்பதாக நடிப்பதும், பின்னர் உண்மையை சொன்ன பிறகு குற்றவுணர்ச்சியின் பெருக்காக அவன் அன்பை புரிந்து கொண்டு காதலிப்பது பல படங்களில் பார்த்தாகிவிட்டது. காதல் வந்தபின் வரும் காட்சிகள் ஓரளவு ஓகே. அவள் அவனது ஆசையின்படி பெரும் நிலப்பரப்பில் பூக்கள் வளர்ப்பதும், உருக்குலைந்த போன பின் அவள் நலன் வேண்டி லிங்கேசன் டாக்டரிடம் அவளை திருமணம் செய்யச்சொல்லி கெஞ்சுவதும் போன்ற காட்சிகளும் தான் அவர்கள் காதல் குறித்த மரியாதையை ஏற்படுத்துகிறது. மனதைத் தொடும்படியான காதல் காட்சிகள் ஏதேனும் முதல் பாதியில் இருந்திருந்தால், கிளைமாக்ஸ் காட்சி இன்னும் நல்லதொரு ‘feel good’ ending ஆக இருந்திருக்கும்!

‘கூனன்’ லிங்கேசனை விட weak ஆன வில்லன்கள்:
ஷங்கர் படங்களில் எப்பொழுதுமே வில்லன்களுக்கு என்று ஒரு charm உண்டு, ஒரு power உண்டு! அது, ‘எந்திரன்’ Chitti 2.0 ஆகட்டும், ‘சிவாஜி’ ஆதிகேசவன் ஆகட்டும், ‘முதல்வன்’ அரங்கநாதன் ஆகட்டும் அல்லது ‘அந்நியன்’ CBI பிரகாஷ் ராஜ் ஆகட்டும். வில்லன் கேரக்டர்கள் எப்பொழுமே ஷங்கர் படங்களில் ஒரு பிளஸ் ஆகத்தான் இருந்துள்ளது. ‘ஐ’ கதையை பொறுத்தவரை, நான்கு சின்ன வில்லன்களும் ஒரு பெரிய வில்லனும் உண்டு. ‘கூனன்’ லிங்கேசனை கொஞ்சம் பவர்ஃபுல் ஆக காட்டிவிட்டதாலோ என்னவோ (அவனால் நினைத்ததெல்லாம் உடனே செய்ய முடிகிறது, சுலபமாக செய்ய முடிகிறது), ஐந்து வில்லன்களுமே பலமற்றவர்களாகவே தெரிகின்றனர். மறுநாள் கல்யாணம் என்பதால் லிங்கேசனை சும்மா கட்டிப்போட்டு வைப்பது வரை, லாஜிக்கில் இயக்குனர் எடுத்துக் கொண்ட சுதந்திரமும் அவர்களை மேலும் weak ஆக்கிவிட்டது!

சுஜாதா இல்லாத ஷங்கர்!?   
‘ஐ’ பார்த்த பின்னர், பெரும்பாலானோர் சொன்ன விஷயம் ‘ஷங்கருடன் சுஜாதா இல்லாத குறை நன்றாக தெரிகிறது; அவர் இல்லாமல் இவரில்லை’ என்று! ‘இந்தியன்’ திரைப்படத்தில் ஆரம்பித்து ஷங்கருக்கு மிகப்பெரும் பலமாகவும், வலது கை போலவும் இருந்தவர் எழுத்தாளர் சுஜாதா. ஆனால், அவர் இல்லாததால் தான் ஷங்கர் சொதப்பிவிட்டார் என்பதும், ஏதோ அவரை ஒரு கத்துக்குட்டி போலவும் பாவிப்பது எல்லாம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று! சுஜாதாவின் இழப்பை கூர்மையில்லாத, அல்லது மனதில் பெரிதாக நிற்காத வசனங்களிலுமே பார்க்க முடிந்தது உண்மை. ஆனால், ஷங்கரின் திறமையை சந்தேகிப்போருக்கு சுஜாதா துணையில்லாமல் அவர் வெற்றி கண்ட ‘காதலன்’, ‘ஜென்டில்மேன்’ படங்களையும், சுஜாதா துணையிருந்தும் கூட தோல்வியடைந்த ‘பாய்ஸ்’ படத்தையும், லாஜிக் ஓட்டைகள் எக்கச்சக்கம் கொண்டிருந்த ‘சிவாஜி’ திரைப்படத்தையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பிரம்மாண்டம்.. பிரம்மாண்டம்.. பிரம்மாண்டம்..:
‘ஷங்கர்’ படம் என்றாலே பிரம்மாண்டம், உண்மை தான்! ஆனாலும், சில இடங்களில் தெரியும் பிரம்மாண்டம் திணிக்கப்பட்டவை போல தெரிகிறது; ஆங்காங்கே, ரசிகனின் மனதில் ‘எதுக்குப்பா இவ்வளவு பிரம்மாண்டம்’ என்கிற கேள்வியை எழுப்பத்தான் செய்கிறது. கதைக்கு தேவையான இடங்களில் பிரம்மாண்டம் நிச்சயமாக அவசியம்; ஆனால், ஷங்கரின் சமீபத்திய படங்களில் பாடல்களுக்கே அதிக செலவு செய்யப்படுவதாக தோன்றுகிறது. உண்மையை சொல்லப்போனால், ஒவ்வொரு பாடலுக்கும் செய்யப்படும் பணத்தை வைத்து C.V.குமார் ஒரு படமே எடுத்துவிடுவார் என்று கூட சொல்லலாம். எது எப்படியோ, பாடல்களின் விஷுவல்கள் ரசிக்கும்படியாகவும், வியக்கும்படியாகவும் உள்ளது உண்மை. ஷங்கர் மற்றும் குழுவினரின் எண்ணங்களுக்கும், எதையும் சாத்தியமாக்கும் அவர்கள் உழைப்பிற்கும் ராயல் சல்யூட்! அதே போல், படத்தின் கதை விளம்பரத்துறை சம்பந்தப்பட்டது என்பதாலும், படத்தின் பாடல்களில் BRU, 3 ROSES, NIPPON PAINTS, DERBY, FAIR & LOVELY, GILLET என கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட முக்கிய brandகள் விளம்பரம் செய்யப்பட்டதன் மூலம் தயாரிப்பாளருக்கு நிச்சயம் மிகப்பெரிய வருவாய் கிடைத்திருக்கக்கூடும்.

ஓஸ்மா ஜாஸ்மின்:
படத்தில் வரும் ஒரு மிகவும் சர்ச்சைக்குரிய கதாபாத்திரம் ‘ஓஸ்மா ஜாஸ்மின்’ என்கிற அந்த திருநங்கை கதாபாத்திரம். திருநங்கை என்றாலே பிச்சை எடுப்பவர்கள், பாலியல் தொழிலாளிகள் என்ற எண்ணமும் அவர்களை வைத்து கேலி, கிண்டல் என காலம் காலமாக தமிழ் சினிமாவில் காட்டி வந்ததும், நிஜத்தில் மக்களுக்கு அவர்கள் மீதான கருத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் காலகட்டத்தில் ஷங்கர் போன்ற ஒரு இயக்குனரின் படத்தில் இப்படியொரு கதாபாத்திரத்தை பார்க்க நேர்ந்தது பெரும் ஏமாற்றமே! அவரது முதல் காட்சியிலேயே வரும் ‘ஊரோரம் புளியமரம்’ பாடல் தொடங்கி எக்கச்சக்கமாக காட்சிகளும், வசனங்களும் காமெடி என்கிற பெயரில் படு மோசம். அந்த கதாபாத்திரத்தின் மொத்த பாத்திரப் படைப்புமே ஒருவித விசனத்தை ஏற்படுத்துகிறது! யோசித்து பார்த்தால், அந்த கதாபாத்திரத்திற்கு எந்த விதத்திலும் ஒரு திருநங்கை அவசியமே இல்லை; அதனை, ஒரு பெண் கதாபாத்திரமாகவே காட்டியிருக்கலாம் என்பது என் கருத்து.

நான் ரசித்த விஷயங்களும், படத்தின் பலமும்:
ஷங்கரின் ‘ஐ’ எத்தனை குறைகளைக் கொண்டிருந்தாலும், ஒட்டுமொத்த படமாக ஈர்க்கவே செய்கிறது. 100ரூபாய் கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகனை ஏமாற்றிவிடவில்லை ஷங்கர்.

படத்தின் மிகப்பெரிய பலம் – விக்ரம்! உயிரைத் தவிர எல்லாவற்றையுமே கொடுத்து நடித்திருக்கிறார்! நிச்சயமாக இது விக்ரமின் நடிப்பில் மிகச்சிறந்த படம். அவரது உழைப்பும், அற்பணிப்பும் பிரமிக்க வைக்கிறது. கொஞ்சம் யோசித்து பாருங்கள், முதுகை சாய்த்துக்கொண்டு முழுதாக ஐந்து நிமிடம் நிற்பதே அத்தனை கடினம். அந்த கூன் முதுகோடு சண்டைப் போடுவதில் தொடங்கி எல்லாம் செய்கிறார் விக்ரம். கூனன் காட்சிகளில் அவரது வசன உச்சரிப்பும், உடல்மொழியும் அட்டகாசம்! இதன் பின்னணியில் இருக்கும் விக்ரமின் பயிற்சியும், வலியும் மெய்சிலிரிக்க வைக்கிறது. ‘உலக நாயகன்’ கமலஹாசனுக்கு பின் ஒரு பாத்திரத்துக்காக தன்னை இவ்வளவு வருத்திக்கொள்ளும் நாயகன் விக்ரமாக மட்டுமே இருப்பார்! சந்தேகமேயின்றி பல விருதுகளை குவிக்கப் போகிறார் விக்ரம்! ஆனால், இவ்வளவு செய்த விக்ரம் சென்னை தமிழ் பேச இன்னும் நிறைய பயிற்சி எடுத்திருக்கலாம், கொஞ்சம் கூட ஒட்டவேயில்லை! கதையின் நாயகியாகிய ஏமி ஜாக்சன் தன் பங்கை மிகச்சரியாக செய்துள்ளார்; lip sync உட்பட எல்லாமே நன்று.

படத்தில் காதல் காட்சிகள் சரியாக அமையவில்லையே தவிர, மற்ற எமோஷன்கள் சரியாகவே அமைந்துள்ளது. படத்தின் மிக முக்கியமான காட்சிகளான லிங்கேசனின் உருமாற்றம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் உயிர் இருக்கிறது. லிங்கேசன் கொஞ்சம் கொஞ்சமாக உருமாறும்பொழுதும், ஜிம் கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்து அழும்பொழுதும், கோவில் வாசலில் ஏமி ஜாக்சன் அடையாளம் தெரியாமல் பிச்சையிட்டு செல்லும்பொழுதும், டாக்டரிடம் திருமணத்திற்கு சம்மதிக்குமாறு காலில் விழும்போதும் அந்த காட்சிகளில் சென்டிமெண்ட் மிகச்சரியாக அமைந்துள்ளது. அதுவே, பின்வரும் பழிவாங்கல் காட்சிகளை ரசிகர்கள் மேலும் ரசிக்குமாறு செய்துள்ளது. ‘அதுக்கும் மேல’ என ஒவ்வொரு முறை லிங்கேசன் சொல்லும்பொழுதும் கைத்தட்டல்களும், விசிலும் பறக்கிறது.

டெக்னிகலாக, ‘ஐ’ மிக அற்புதமான திரைப்படம். பாடல்கள், மிரட்டும் பின்னணி இசை, பி.சி.ஸ்ரீராம் அவர்களின் ஒளிப்பதிவு, VFX, make-up, கலை இயக்கம், சண்டைப்பயிற்சி என எல்லா டிபார்ட்மெண்ட்டிலிருந்தும் மிகச் சிறப்பாக வேலை வாங்கியுள்ளார் ஷங்கர். நான் ஏற்கனவே கூறியது போல், எடிட்டிங் மட்டும் sharp ஆக இருந்திருக்கலாம். இரண்டரை மணி நேரம் அல்லது அதிகபட்சம் இரண்டே முக்கால் மணிநேரம் ஓடும் திரைப்படமாக ‘ஐ’ இருந்திருந்தால், நிச்சயம் எல்லோருக்குமே பிடித்திருக்கக்கூடும் என நினைக்கிறேன்.

படம் பார்த்த சிலர் ‘என்ன இது, படம் ரொம்ப ரொம்ப சிம்பிளா இருக்கு… ஷங்கர் படம் மாதிரியே இல்ல’ என்கின்றனர்; அதையே சிலர், ‘படம் சிம்பிளா புரியுது, நல்லாருக்கு… ஷங்கர் படத்துல இது ரொம்பவே வித்தியாசமா இருக்கு’ என்கின்றனர். அதுதான், படத்தின் வெற்றி என நான் சொல்வேன். என்னிடம் ஒருவர் சொன்னார், ‘நான் ஐ படத்தை ரொம்ப எதிர்பார்த்து சென்றேன்; ஷங்கர் ஏமாற்றமளித்துவிட்டார். ஆம்பள படத்தை எதிர்பார்ப்பே இல்லாமல் போய் பார்த்தேன்; சுந்தர்.சி என் பணத்தை காப்பாற்றிவிட்டார்.’ என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பெயரளவிற்கு கூட எதுவுமே புதிதாக யோசிக்காமல் ஏற்கனவே வந்த பல ஹிட் படங்களின் சாயல்களில் ஒரு கதை எழுதி, முழுக்க முழுக்க Skin-showவையும் சந்தானத்தையும் நம்பி எடுக்கப்பட்டுள்ள ஒரு குப்பை படத்தையும், ‘ஐ’ போன்ற படத்தையும் ஒப்பிட்டு பேசுவதையே என்னால் ஜீரணிக்க முடியவில்லை! எதிர்பார்ப்போடு படத்திற்கு சென்று, ஏமாற்றத்தோடு திரும்புவது இயல்பு தான். ஆனால், ‘படம் நன்றாக இருக்கும்’ என்கிற எதிர்பார்ப்போடு ஒரு படத்திற்கு செல்வது வேறு; ‘படம் இப்படித்தான் இருக்கும்’ என்று கதை மீது  நீங்களாக ஒரு எதிர்பார்ப்போடு செல்வது வேறு! அதே போல், சிலர் ‘ஷங்கர் அவர்கள் விக்ரமின் இரண்டரை ஆண்டு உழைப்பையே வீணடித்துவிட்டார்; ஒரு சுமாரான படத்தின் மூலம் விக்ரமை ஏமாற்றிவிட்டார்’ என்றெல்லாம் கூறுகின்றனர். எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை; படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும்பொழுது, பெரும்பான்மையான மக்கள் ‘படம் நல்லாருக்கு’ என ரசிக்கும்பொழுது, எப்படியும் விக்ரமிற்கு நிறைய விருதுகள் கிடைக்கப்போகிறது என்றான பிறகு அவரது உழைப்பு எந்த வகையில் வீணாகிவிட்டது என்கிறார்கள் என புரியவில்லை.

மொத்தத்தில், ‘ஐ’ திரைப்படம் ஷங்கரின் ஆகச்சிறந்த படைப்பு என்றோ இந்திய சினிமாவை புரட்டிப்போடும் படம் என்றெல்லாம் நான் சொல்லவில்லை; அதே போல, இது ஷங்கரின் மிக மோசமான ஸ்கிரிப்ட் என்று சிலர் சொல்வதையும் ஏற்கவில்லை. ‘ஐ’ நிச்சயமாக வழக்கமான ஒரு கமர்ஷியல் திரைப்படம் அல்ல; கதையிலும் எடுக்கப்பட்ட விதத்திலும் மிக வித்தியாசமான ஒரு ஜனரஞ்சக சினிமா. உங்களுக்குள் இருக்கும் Christopher Nolan’ஐ சிறிது நேரம் தூங்கப்போட்டாலே போதும், நிச்சயம் இந்த படத்தை உங்களால் ரசிக்க முடியும். எல்லா வகையிலும் நீங்கள் கொடுக்கும் 100ரூபாய்க்கு மதிப்புள்ளது ஷங்கரின் ‘ஐ’!

என் கருத்துக்களுடன் நீங்களும் ஒத்துப்போனால், மறக்காமல் ‘SHARE’ செய்யுங்கள்!
ஒத்துப்போகாதாவர்கள், ஃப்ரீயா விடுங்கள்… அடுத்த வேலையை பார்ப்போம்.

எழுதியவர்:
ரஹ்மான்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s