@காக்காமுட்டை @KaakaMuttai – இந்தளவிற்கு கொண்டாடப்படுவது ஏன்? இவ்வளவு பெரிய வெற்றியடைந்தது எப்படி?

காக்கா_முட்டை - இந்தளவிற்கு கொண்டாடப்படுவது ஏன் இவ்வளவு பெரிய வெற்றியடைந்தது எப்படி

படம் வெளியான முதல் நாளிலேயே படத்தின் பட்ஜெட்டை விட அதிகமான வசூல்… இரண்டே நாட்களில் இரண்டரை கோடி வசூல்… படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆகியும் காசி, woodlands போன்ற திரையரங்குகளில் கூட இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அதிசயம்… விகடன் விமர்சனத்தில் 60 மதிப்பெண்கள்… ‘தமிழ் சினிமாவின் பொன்முட்டை’, ‘தமிழ் சினிமாவிற்கு கிடைத்த தேவதூதன்’, ‘இந்திய சினிமாவின் பெருமை, பொக்கிஷம்’ என்றெல்லாம் முன்னணி இயக்குனர்கள், முன்னணி பத்திரிகைகள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டு என எல்லா விதத்திலும் வெற்றியை ருசித்து, நம் சினிமா ரசிகர்களால் திணற திணற கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் திரைப்படமாகியுள்ளது ‘காக்கா முட்டை’. இப்படத்தைப் பாராட்டியும், விவாதத்திற்குள்ளாக்கியும் பல பதிவுகளை காண நேர்ந்தது. அப்படி, அறுபதோடு அறுபத்தி ஒன்றாக இந்த பதிவில் நீங்கள் படிக்கவிருப்பது கடந்த 10, 15 ஆண்டுகளில் வெளியான மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக ஏன் ‘காக்கா முட்டை’ இருக்கிறது என்பதை பற்றித்தான். (மூன்று முறை தியேட்டரில் இந்த படத்தை கண்டுகளித்த சந்தோஷத்தை உங்களுடன் எழுத்துக்களில் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாக, இந்த பதிவை எடுத்துக் கொள்கிறேன்).

படத்தைப் பார்த்தவர்கள் மட்டும் மேற்கொண்டு படிக்கவும்… (பூராவுமே spoilers தான்)

படத்தைப் பற்றி பேசுவதற்கு முன்னால், படத்தின் டைட்டிலைப் பற்றியே சிலருக்கு புரியவைக்க வேண்டியுள்ளது… நண்பன் ஒருவர் கேட்டார், ‘ஒரு வித்தியாசமான டைட்டில் வைக்க வேண்டுமென்பதற்காகவும், அந்த சிறுவர்கள் ஏதோ காக்கா முட்டை குடிக்கிறார்கள் என்பதற்காக அதையே படத்தின் டைட்டிலாக வைத்தது ரசிக்கும்படியில்லை’ என்றார். இந்த சந்தேகம் வேறு சிலருக்கும் இருக்க வாய்ப்புண்டு. அவர்களுக்கு எனது விளக்கம் பின்வருமாறு:
‘காக்கா முட்டை’ என்கிற இந்த தலைப்பு சும்மா ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அல்ல; மாறாக, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. படத்தின் முதல் காட்சியிலிருந்தே சிறுவர்கள் இருவரும் நண்பர்களால் ‘காக்கா முட்டை’ என்றே அழைக்கப்படுகின்றனர், அவர்கள் காக்கா முட்டை குடிப்பதைப் பார்க்கும் நைனா கூட ‘டேய், நீங்க இன்னுமாடா இதை குடிக்கிறீங்க’ என்று கேட்கிறான் (இதன் மூலமே அந்த சிறுவர்கள் நீண்ட நாட்களாய் காக்கா முட்டை குடிக்கிறார்கள் என்பதும், இந்த வினோத பழக்கத்தினாலேயே அவர்கள் அப்பெயரால் அழைக்கப்படுகிறார்கள் என்பதும் தெளிவாக சொல்லப்படுகிறது). இந்த பழக்கத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்தியது அந்த சிறுவர்களது பாட்டியாகவே இருக்கும் என்பது, அந்த சிறுவர்களின் அம்மா திட்டுவதை வைத்து அறிகிறோம். காக்காவை திசைதிருப்பி முட்டையை எடுக்க, பாக்கெட்டில் அரிசியை பதுக்கும்பொழுது பாட்டி சிரிக்கிறாள். இன்னொரு காட்சியில் ‘விக்குற விலைவாசியில கோழி முட்டை வாங்க முடியுமா?’ என்று சிறுவர்களுக்காக நியாயப்படுத்துகிறாள். படம் நெடுக அந்த சிறுவர்கள் அந்த பெயரை ஒரு அடையாளமாகவும், பெருமிதமாகவுமே பார்க்கின்றனர். இந்த டைட்டிலே மிக அழகாக கதை சொல்லிவிடுகிறது. அதாவது, 3 ரூபாய் 4 ரூபாய் கொடுத்து கோழிமுட்டை வாங்கமுடியாத சிறுவர்களின் காஸ்ட்லியான பீட்ஸா கனவுதான் இந்த காக்கா முட்டை! ‘காக்காவும் ஒரு பறவைதானே.. அதுவும் நம்ம கூடவே வேற இருக்கு’ என்கிற வசனத்தின் மூலம் அது மேலும் அழகாகிப் போகிறது. இவ்வளவு அர்த்தம் கொண்ட ஒரு டைட்டிலை வெறுமனே கவன ஈர்ப்புக்காக வைத்தது என சொல்பவர்களை என்னவென்று சொல்வது.

சரி… காக்கா முட்டையின் ஸ்பெஷாலிட்டிகளும், இத்திரைப்படத்தில் நான் மிகவும் ரசித்த விஷயங்களும் பின்வருமாறு…

1. நாம் கண்டும் காணாத மக்களும், அவர்களது உலகமும்

இப்படத்தின் கதை நடக்கும் களம், நமக்கு அதிகம் பழக்கமில்லாத வடசென்னையின் ஏதோ ஒரு பகுதி அல்ல… தென்சென்னையின் முக்கிய முகமான சைதாபேட்டை. சைதாபேட்டையையும், கிண்டியையும் இணைக்கும் அந்த கூவம் பாலத்தை நாம் எத்தனை முறை கடந்திருப்போம்? ஆனால், எத்தனை முறை அங்குள்ள குடும்பங்களை கவனித்திருப்போம்?! நிஜத்தில் நாம் கவனிக்க தவறிய / கண்டும் காணாத / காணவே விரும்பிடாத அம்மக்களையும் அவர்களது உலகத்தையும் இதைவிட சிறப்பாக காட்டிட முடியாது என சவாலே விடலாம்!
நான்கு பேர் நிற்கவே இடம் இல்லாத அந்த வீட்டிலேயே அம்மா, பாட்டி, இரண்டு சிறுவர்கள் மற்றும் நாய்க்குட்டி என எல்லோரும் தூங்குவது… டி‌வி, படுக்கை, அடுப்பு, அதன் பக்கத்திலேயே (வீட்டினுள்ளேயே கழிவறை) என அந்த வீடே கனகச்சிதம் (நிச்சயமாக, அப்படியொரு வீட்டை தமிழ் சினிமாவில் யாரும் பார்த்திருக்க முடியாது). நாம் மூக்கை மூடிக்கொண்டு கடக்கும் கூவம் நதியில் சிறுவர்கள் ஆனந்தமாய் குளியல் போடுவது.. பாட்டி குளிப்பதற்காக (ஓட்டை விழுந்த) பிளாஸ்டிக் பையில் தண்ணீர் கொண்டுவருவது.. எப்பொழுதுமே கூடவே இருக்கும் அந்த நாய்க்குட்டி..  30 ரூபாய் திருட்டு கேபிள் கனெக்ஷன்.. பிளாஸ்டிக் பாட்டிலில் குண்டு பல்பு என சின்ன சின்ன விஷயங்களிலும் அவ்வளவு detailing உண்டு.

  1. நிரம்பி வழியும் யதார்த்தமும், முகத்தில் அறையும் உண்மைகளும்
    படம் நெடுக நிரம்பி வழியும் யதார்த்தமும், just like that நம் முகத்தில் அறையும் உண்மைகளுமே காக்கா முட்டையை ரொம்ப ‘ஸ்பெஷல்’ ஆக்குகிறது.சென்னையின் பூர்வகுடி மக்களானவர்களுக்கு வாழ்வதற்கு வீடும், இடமும் கொடுக்காமல் பாலத்தின் கீழ் கூவத்தோடு உறவாடவிட்டது.. காசில்லாதவர்கள், சேரி மக்கள் என்கிற காரணத்தால் ஒரு மாலுக்குள் கூட நுழைய முடியாது என்கிற எண்ணம் விதைத்த கொடுமை.. சாப்பிட அரிசி இல்லாத வீட்டில், இரண்டு இலவச டி‌விக்கள்.. அங்கொன்றும், இங்கொன்றுமாய் இருக்கும் மரங்கள் கூட வெட்டப்பட்டு இந்த நகரம் மொத்தமாய் concrete காடாய் மாறும் அலங்கோலம்… ‘அந்த காக்கா எல்லாம் நைட்டுல எங்கடா போகும்?’ என்கிற அந்த சிறுவனின் கேள்விக்கு நம்மிடம் இல்லாத பதில்… ‘உன் குண்டியிலே தாரை ஊத்தத்தான்’ என்கிற வசனம் தொடங்கி, டி‌வியில் சினிமா நட்சத்திரங்கள் செய்யும் அத்தனை அபத்தங்களும் சிறுவர்கள் மனதில் அப்படியே பதிந்து போவது… ஒரு கூண்டுக்குள்ளேயே வாழும் (வளர்க்கப்படும்) பணக்கார சிறுவர்களின் வாழ்க்கையைக் குறிக்கும் வகையிலான வேலி கம்பியின் மறுபுறம் இருந்தே பேசும் பணக்கார சிறுவனின் நட்பு… ‘அடிக்கக்கூடாதுன்னு policy வெச்சிருக்கேன்… எல்லாத்துக்கும் ஒரு limit தான்’, smellஏ அந்த மாதிரி இல்லையே’ என தன்னையே அறியாமல் பேசப்படும் இங்கிலீஷ் வார்த்தைகள்.. ‘ஆசைக்கு அளவுகள் இல்லையே… அதைத் தொடர்ந்தால், வாழ்க்கை தொல்லையே’ என்பது போல படம் முழுக்க வரும் அழகான பாடல் வரிகள்.. காமெடியாகத் தோன்றினாலும் ரொம்ப சீரியசான உண்மைகள் பேசும் ‘கெட்டுப் போனாதான்டா நூல் நூலா வரும்..’, ‘போட்டுருக்கிற சொக்காயைப் பொறுத்துத்தான், யாருக்கும் மதிப்பு’ என்பது போன்ற வசனங்கள்.. Toy watch என்று கடைக்காரர் சொல்லியும், அதனை நம்ப மறுத்து அண்ணனோடு கோபித்துக்கொள்ளும் சிறுவன்.. ‘எனக்கு பீட்ஸாதான் வேணும், அப்பா எல்லாம் வேணாம்’ என சொல்லுமளவிற்கு அனாவசிய பொருட்களை அத்தியாவசியமாக பார்க்க செய்யும் இன்றைய விளம்பரங்கள்.. ‘45 ரூபாய்க்கு பீட்ஸா’ என்ற திட்டத்தின் மூலம், குப்பத்து சிறுவர்களது வீட்டிற்குள்ளும் தனது வியாபாரத்தை எடுத்து செல்ல நினைக்கும் தந்திரம்… ‘இல்லாதவங்க இருக்கிற இடத்துல கடையைப் போட்டு ஏன் உசுப்பேத்தணும்’ என்பது போன்ற சுரீர் வசனங்கள்… இப்படி படம் முழுக்க எந்த காட்சியிலும், வசனத்திலும் யதார்த்தம் மீறாமல் நின்றதிலேயே இயக்குனர் மணிகண்டன் ஜெயித்துவிடுகிறார்.3. குழந்தைகள் உலகம்
    ‘காக்கா முட்டை’ படம் பார்த்த பலர் சிலாகித்த விஷயம், இத்திரைப்படம் எவ்வாறு தனது பள்ளிப்பருவ நாட்களை நினைவுப்படுத்தியது என்பதும், எவ்வாறெல்லாம் இப்படம் தங்களது சிறுவயது வாழ்க்கையை ஒத்திருந்தது என்பதும்…

படுக்கையிலே சிறுநீர் கழித்தல்.. வீட்டு ஒட்டின் மேல் ஏறி விளையாடுதல்.. தேங்காய் நீருக்கான சண்டை.. காக்காயை ஏமாற்றி முட்டையை எடுத்தல்.. ‘TVக்கு பதிலா ரேஷன்ல செல்போன் கேட்ருக்கலாம்ல…’ என்று அம்மாவிடம் கேட்பது.. டெலிவெரி பாயை மறித்து, பீட்ஸாவை திறந்து காட்ட சொல்லி கேட்பது.. டாஸ்மாக் குடிமகனுக்கு lift கொடுப்பது… ‘எனக்கு ஏன்ம்மா தொப்புள் இருக்கு’, ‘உனக்கு ஏன் பழரசம்ன்னு பேரு வெச்சாங்க’ என்று எப்பொழுதும் ஏதாவது கேள்வி கேட்டுக்கொண்டேயிருப்பது என இந்த குழந்தைகளின் ‘துறு துறு’ செயல்கள் மூலமாகவே அவர்களின் உலகத்திற்குள் இயக்குனர் நம்மை இழுத்துக்கொள்வதிலேயே பாதி ஜெயித்துவிடுகிறார்.

ரயிலில் செல்பவர்களின் மொபைல் ஃபோனை திருடாமல் தான் செய்வது தவறென உணர்ந்து தவிர்ப்பது, மீதமான பீட்ஸாவை சாப்பிடாமல் செல்வது, பானி பூரி சாப்பிட விரும்பும் பணக்கார சிறுவர்களிடம் காசு கொடுத்தே துணியை வாங்குவது என சிறுவர்களின் கதாபாத்திரம் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேல்… வயதிற்கு மீறிய தத்துவங்கள் பேசாமல், குத்துப்பாட்டிற்கு ஆடாமல், காதல் செய்யாமல் படம் முழுக்க குழந்தைகள் குழந்தைகளாகவே இருப்பதே அத்தனை அழகு!

  1. இருப்பவன், இல்லாதவன் பற்றிய பார்வை

படத்தின் கதையே இல்லாதவர்களைப் பற்றியது என்பதால், படம் முழுக்க பணக்கார ஏழை பேதம் குறித்தும், அந்த இரு வேறு உலகத்தை சேர்ந்தவர்களின் தேவைகள், ஆசைகள் மற்றும் வாழ்வைப் பற்றியும் அழகான காட்சிகள் உண்டு.

குப்பத்து சிறுவர்கள் தங்களால் எளிதாக வாங்க முடியாத பீட்ஸாவிற்கு ஏங்குகிறார்கள். பணக்கார வீட்டு சிறுவர்களோ ரோட்டோர பானி பூரியை சாப்பிட ஆசைப்படுகிறார்கள்

அந்த பணக்கார சிறுவன் இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஒரு நாய்க்குட்டி வாங்குகிறான், காக்கா முட்டைகளின் அம்மாவோ முப்பதாயிரம் ரூபாய் இருந்தால் தன் கணவனை ஜெயிலிலிருந்து வெளியே கொண்டு வரலாம் என பரிதவிக்கிறாள்.

பணக்கார சிறுவனுக்கு சல்யூட் அடிக்கும் பீட்ஸா கடை செக்யூரிட்டி, குப்பத்து சிறுவனை பணமிருந்தும் உள்ளே விடாமல் அடிப்பது போல இன்னும் பல காட்சிகள் உண்டு.

5. அழகான கதாபாத்திரங்களும், அருமையான நடிப்பும்
‘காக்கா முட்டை’ படத்தின் உயிரே அப்படத்தின் அழகான கதாபாத்திரங்களும், அருமையான நடிப்பை தந்த நடிகர்களின் பங்களிப்பும் தான். எப்பொழுதுமே சிரித்துக்கொண்டு ஏதாவது கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும் சின்ன காக்கா முட்டையாக ரமேஷ், கொஞ்சம் பக்குவத்தோடும் சட்டென கோபப்படும் குணத்தோடும் பெரிய காக்கா முட்டையாக விக்னேஷ் இருவரும் அசத்தியிருக்கிறார்கள். இந்த சிறுவர்களிடமிருந்து இவ்வளவு நேர்த்தியான நடிப்பைப் பெற்றிட இயக்குனர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாரோ தெரியவில்லை.

காக்கா முட்டைகளுக்கு அடுத்தபடியாக படத்தின் உயிராக இருப்பது சிறுவர்களின் அம்மாவாக வரும் ஐஸ்வர்யாவின் நடிப்பு. நேர்த்தியான சென்னை பாஷையில் ஆரம்பித்து மேக்கப் வரை சேரியில் இருக்கும் ஒரு இளம் தாயாகவே வாழ்ந்திருக்கிறார். காக்கா முட்டை என சொல்லும்போது கோபப்படுவது, கணவனின் நிலை கண்டு வக்கீலைத் திட்டுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாமல் கலங்குவது, ‘பசங்களை ரொம்ப அடிச்சிட்டாங்க’ என்று கேள்விப்பட்டதும் வருந்துவது, சின்ன காக்கா முட்டை படுக்கையை நனைப்பதை நிறுத்திவிட்டபின் வெளிப்படும் அந்த சின்ன புன்முறுவல் என தனது நடிப்பின் மூலம் ‘இவருக்கு ஏன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கொடுக்கப்படவில்லை’ என கேட்கவைக்கிறார்.
சிறுவர்கள் காக்கா முட்டை குடிப்பதை ஆதரித்து பேசும்போதும், ‘மெய்யாலுமே இப்படித்தான் டி‌வியில பேசுறானா’ என கேட்கும்போதும், பீட்ஸாவின் விலையை கேட்டு ஆச்சர்யப்பட்டு ‘அவனுக்கு ஏன் 300 ரூபாய் குடுக்கணும்?’ என்று சொல்லி தானே பீட்ஸா செய்து கொடுப்பதும்,  தன்னால் தன் மருமகளுக்கு உதவ முடியவில்லை என அழுதுகொண்டே சிறுவர்களிடம் ‘நம்மகிட்ட காசு இல்லேல்ல.. அதான் உள்ளே விட்ருக்கமாட்டான்’ என சொல்லும்போதும் நம் வீட்டு பாட்டியை அப்படியே கண்முன் நிறுத்துகிறார் அந்த அழகு பாட்டி.

பழரசமாக வரும் ஜோ மல்லுரியின் கதாபாத்திரமும், அவரது நடிப்பும், சிறுவர்களுடனான நட்பும் அத்தனை நெகிழ்ச்சிக்குரியது. ஜெயிலில் இருக்கும் அப்பா, டாஸ்மாக்கிலேயே திருடும் நைனா, அவனது ‘முந்திரிக்கொட்டை’ அசிஸ்டண்ட், கரியை வாங்கும் அந்த கடை அக்கா, பீட்ஸா கடை ஒனரின் ஆர்வக்கோளாறு பள்ளி நண்பன் என எல்லாமே ரசனைக்குரிய கதாபாத்திரங்கள். பிரச்சினைகளை வளர்த்து ஆதாயம் பார்க்கத் துடிக்கும் அரசியல் முதலைகள், சின்ன விவகாரங்களையும் பூதாகரமாக்கும் ஊடகங்கள் ஆகியவற்றையும் அழகாக கதைக்குள் கொண்டுவந்துவிட்டார் மணிகண்டன்.

சிவசிதம்பரம் தவிர எந்த கதாபாத்திரத்தின் பெயரையுமே, கடைசி வரை பயன்படுத்தாததும் இயக்குனரின் சாமர்த்தியம்!


6. டெக்னிகல் அம்சங்கள்

ஒரு படத்தின் வெற்றிக்கு தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தளவிற்கு  உறுதுணையாக இருந்ததை சமீபத்தில் வேறெந்த திரைப்படத்திலும் பார்க்கவில்லை. இயக்குனரே ஒளிப்பதிவராக இருந்ததால், கதையை சொல்லிய விதத்தில் அத்தனை நேர்த்தி. படம் முழுக்க நாமும் சிறுவர்களுடனே பயணிப்பது போல, அந்த சின்ன வீட்டிற்குள் பாட்டியுடனும் அந்த குட்டி நாயுடனும் நாமும் ஒருவராக இருப்பது போல ஒரு உணர்வைத் தருகிறது ஒளிப்பதிவு. மறைந்த எடிட்டர் கிஷோரின் எடிட்டிங்கும் அதற்கு பெரிதும் உதவியிருக்கிறது. முதல் முறை பார்த்தபொழுது, இன்னும் better ஆக இருந்திருக்கலாமோ என எண்ண வைத்த ஜி‌.வி.பிரகாஷின் இசையை இரண்டாம் முறையிலிருந்து இன்னும் அதிகமாக ரசிக்க முடிந்தது. வீட்டிற்குள்ளே டாய்லெட் செட், அறுக்கப்படும் மரமே ஒரு செட் என கலை இயக்கத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொண்ட ஒரு திரைப்படம் ‘காக்கா முட்டை’.

மேலே சொன்ன எல்லா காரணங்களையும் விட, ‘இது போன்ற திரைப்படங்களையெல்லாம் மக்கள் ரசிக்கமாட்டார்கள், வணிக ரீதியாக வெற்றி பெறாது’ என்ற பொய்யான பிம்பத்தை ‘காக்கா முட்டை’ மூலம் சுக்குநூறாக உடைத்ததற்காகவே இயக்குனர்கள் மணிகண்டனுக்கு ஒரு மிகப்பெரிய சல்யூட்!

இதெல்லாம் போக, இத்திரைப்படம் குறித்து வேறு சில விஷயங்களையும் இங்கு சொல்ல ஆசைப்படுகிறேன்…

* இந்த படத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள ‘சிறந்த குழந்தைகள் திரைப்படம்’ என்கிற விருதில் எனக்கும் சரி, படத்தைக் கொண்டாடும் பலருக்கும் சரி… கொஞ்சமும் உடன்பாடில்லை! ‘உணவு அரசியல்’ தொடங்கி பல முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசும் ஒரு படத்தை குழந்தைகள் நடித்த ஒரே காரணத்தால், ‘குழந்தைகளுக்கான திரைப்படம்’ என அழைப்பது எவ்வளவு குழந்தைத்தனம்!

* இவ்வளவு சிறந்த ஒரு திரைப்படத்திற்கு வெறும் 2 தேசிய விருதுகள் மட்டுமே கொடுத்ததும் சிறந்த நடிகை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த எடிட்டிங் உட்பட வேறு சில பிரிவுகளில் விருது கொடுக்கத் தவறியதும் வருத்தத்திற்குரியதே.

* இந்த திரைப்படத்தை ‘ஒரு average film’ ஆகவும், ‘short film material’ ஆகவும், ‘ரொம்ப சிம்பிளாக இருக்கிறது’ என்றும் எழுத்தாளர் ஞாநி சங்கரன் உட்பட சிலர் கூறியிருக்கின்றனர். உலகமெங்கும் கொண்டாடப்படும் மிகச்சிறந்த கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றான ‘Children of Heaven’ திரைப்படமும் ரொம்ப சிம்பிள் ஆன ஒரு திரைப்படம்தான், short film போன்ற ஒரு கதையைக் கொண்டதுதான், ஆனால், அளவில்லாத அழகைக் கொண்ட ஒரு திரைப்படம் அது. ஒரு வேளை, அந்த திரைப்படத்தையும் ஒரு ‘average film’ என்றே சொல்வார்களோ இவர்கள்?!

* இந்த திரைப்படத்தின் வெற்றி குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் நடைபெறுகின்றன. என்னை பொறுத்தவரையில் ‘காக்கா முட்டை’ இவ்வளவு பெரிய வெற்றி பெற காரணம்
1) தேசிய விருது உட்பட பல திரைப்பட விழாக்களில் வென்றதை ஒரு பெரிய அடையாளமாகக் கொண்டு வெளியானது
2) Branding…! தனுஷ் – வெற்றிமாறன் ஆகிய இருவரும் இந்த படத்தின்  தயாரிப்பாளராக அமைந்தது, FOX STAR STUDIOS இப்படத்தின் விநியோகத்தில் ஈடுபட்டது
3) இது எல்லாவற்றையும் விட முக்கிய காரணம்… இத்திரைப்படம் ஒரு light-hearted entertainer ஆக இருப்பது (இதே இடத்தில் ஆரண்ய காண்டம், வாகை சூட வா, பூ, மதுபானக்கடை இருந்திருந்தால் இந்தளவு வெற்றி பெற்றிருக்குமா என்பாடு சந்தேகம்தான்!)

இந்த பதிவினை உங்களுக்கு பிடித்திருந்தால், என் கருத்துக்களுடன் உடன்பட்டால் உங்கள் நண்பர்களுடன் ‘SHARE’ செய்யுங்கள். மேலும் இது போல நிறைய பதிவுகளை படிக்க, https://boxofficebossblog.wordpress.com’ஐ ‘SUBSCRIBE’ செய்யுங்கள்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s