Siva Karthikeyan – The rise of a Boy-next-door to a Most-wanted-actor!

நேற்று, நடிகர் சிவகார்த்திகேயனின் 31வது பிறந்தநாள்! சினிமாவில் நடிக்க ஆரம்பித்து நான்கே ஆண்டுகளில், இவர் கண்ட வளர்ச்சி அபாரமானது! மொத்தம் 6, 7 படங்களில் மட்டுமே ஹீரோவாக நடித்துள்ள சிவகார்த்திகேயனின் படங்களுக்கு விநியோகிஸ்தர் மற்றும் திரையரங்க உரிமையாளர்களிடையே மிகப்பெரிய demand உண்டு. இன்னும் சொல்லப்போனால், அஜித் விஜய் போன்ற பெரிய நடிகர்களுக்கு அடுத்தபடியாக நல்ல மாஸ் ஓபனிங் உண்டு; இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து வயதினருக்கும் பிடித்த நாயகன் என்ற சிறப்பம்சமும் உண்டு.

ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சாதாரண இளைஞன், தமிழ் சினிமாவின் ‘most wanted’ நடிகர்களில் ஒருவரான கதையை சொல்வது தான் இந்த பதிவின் நோக்கம்.

Siva Karthikeyan - The rise of a Boy-next-door to a Most-wanted-actor! 1

காரைக்குடி அருகேயுள்ள சிங்கம்புணரியில் பிறந்த சிவகார்த்திகேயன் திருச்சி மாநகரில் வளர்ந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்த அவர், முழுக்க முழுக்க அன்னையின் கவனிப்பிலேயே வளர்ந்தார். திருச்சியில் Campion Anglo-Indian பள்ளியில் படித்த அவர், பின்னர் திருச்சி JJ பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அதன் பின்னர், தன் மாமாவின் உதவியோடு IIPM கல்லூரியில் MBA முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரி காலத்தில் மிமிக்ரி மற்றும் stand-up காமெடிகளில் ஆர்வம் கொண்டிருந்த இவர், நண்பர்கள் வற்புறுத்தலால் (MBA கோர்ஸில் சேரும் முன்)  ‘ஸ்டார் விஜய்’ தொலைக்காட்சி நடத்திய ‘கலக்கப்போவது யாரு’ ரியாலிட்டி காமெடி ஷோவில் கலந்து கொண்டார்; Finals வரை தேர்வாகி முதலிடத்தைப் பிடித்து ஜெயிக்கவும் செய்தார்.

அதன் பின், விஜய் டிவியில் ‘ஜோடி no.1’, ‘பாய்ஸ் vs கேர்ள்ஸ்’, ‘ஏர்டெல் சூப்பர் சிங்கர்’ உட்பட பல ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளாராக காணப்பட்டார்; இரண்டு முறை ‘விஜய் அவார்ட்ஸ்’ நிகழ்ச்சியைக் கூட கோபிநாத் உடன் இணைந்து தொகுத்து வழங்கியுள்ளார். ‘ஜோடி no.1’ ‘பாய்ஸ் vs கேர்ள்ஸ்’ போன்ற டான்ஸ் ஷோக்களை அதிகப்படியான நேயர்கள் பார்த்ததற்கும், அந்த ஷோக்களின் TRP உயர்ந்ததற்கும் காரணம் சிவாவின் கலகலப்பான நிகழ்ச்சி தொகுப்பு தான் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. அதன் பின், சிவகார்த்திகேயனின் ரசிகர் வட்டத்தை இன்னும் பல மடங்கு உயர்த்தியது ‘அது இது எது’ நிகழ்ச்சி! விஜய் டிவியுடனான பந்தம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு பெரிய அடையாளத்தையும், அவருக்கென ஒரு ரசிகர் வட்டத்தையும் பெற்றுத்தந்தது. இதற்கிடையில் இவரது நண்பரான அட்லீ (ராஜா ராணி மற்றும் தெறி படங்களின் இயக்குனர்) இயக்கத்தில் முகப்புத்தகம், குரல் 786 மற்றும் 360° போன்ற குறும்படங்களிலும் நடித்திருந்தார்; ஸ்ரீகாந்தன் ஆனந்த் என்பவரது இயக்கத்தில் ‘Identity’ என்ற குறும்படத்திலும் நடித்தார்.

சிவகார்த்திகேயன், இன்று இந்த உச்சத்தில் இருப்பதற்கு முக்கிய நபர்களில் மூவர் – ‘ஸ்டார் விஜய்’ தொலைக்காட்சி, இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் நடிகர் / தயாரிப்பாளர் தனுஷ் & ஐஸ்வர்யா தனுஷ்!

2011ஆம் ஆண்டில் தனுஷ் நடிப்பில் ‘3’ திரைப்படம் தயாராகிக் கொண்டிருந்தபொழுது, சிவகார்த்திகேயனின் டிவி நிகழ்ச்சி ஒன்றில் அவரின் நகைச்சுவைத் திறனைப் பார்த்துவிட்டு, இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ்  அவரை அப்படத்தில் ஒரு நல்ல காமெடி ரோலில் நடிக்கவைத்தார். தன் காமெடி மூலம் அரங்கையே அதிரச் செய்தார் சிவகார்த்திகேயன். அதே சமயம், 2011ஆம் ஆண்டில் ‘வாகை சூட வா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவினை சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய பாணி மிகவும் பிடித்துப் போகவே, தனது ‘மெரினா’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைத்தார் இயக்குனர் பாண்டிராஜ். தன்னால் அந்த ரோலில் சிறப்பாக நடிக்க முடியுமா என தயங்கிய பொழுது, அவரை பெரிதும் ஊக்கப்படுத்தி தயார்படுத்தினார் பாண்டிராஜ். இதற்கிடையில், இயக்குனர் எழில் இயக்கிய ‘மனம் கொத்திப் பறவை’ திரைப்படத்தில் முதன்முதலாக கதாநாயகனாகவும் நடித்தார். அதன் பிறகு, சிவகார்த்திகேயனின் சினிமா கேரியருக்கு சரியான தளம் அமைத்துக் கொடுத்ததில் பெரும்பங்கு உடையவர்கள் பாண்டிராஜும், தனுஷும்! பாண்டிராஜ் அவர்களின் அடுத்த படமான ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’வில் இரண்டு நாயகர்களுள் ஒருவராக விமலுடன் நடித்தார்; அந்த திரைப்படமும் வெற்றி பெற்றது. பாலுமகேந்திராவின் சீடர்களில் ஒருவரான துரை செந்தில்குமார் தனுஷை கதாநாயகனாக வைத்து படம் இயக்க அவரிடம் ஒரு கதையை சொன்னார்; தனுஷோ தன்னை விட சின்ன நடிகர் யாரேனும் அந்த கதையில் நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணி சிவகார்த்திகேயனை பரிந்துரைத்தார்; அந்த திரைப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்தார். சின்ன ஹீரோ நடிக்கும் படம், விநியோகிஸ்தர்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காக ஒரு பாடலில் நயன்தாராவோடு தோன்றி ஆடவும் செய்தார்; படத்துக்கு மிக சிறப்பாக விளம்பரம் செய்து நல்ல ஒபனிங்க் கிடைக்கவும் செய்தார். ‘எதிர்நீச்சல்’ திரைப்படமும் நல்ல வெற்றியைப் பெற்றது, சிவகார்த்திகேயனை பேமிலி ஆடியன்ஸிடையே இன்னமும் நன்றாக கொண்டு சேர்த்தது.

அடுத்ததாக வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படம் தான் அவரது கேரியரில் மிக முக்கியமான படம். வசூல்ரீதியாக ஒரு Blockbuster ஆக மட்டுமில்லாமல், சிவகார்த்திகேயனுக்கு ‘ஸ்டார்’ என்கிற அந்தஸ்தையும் தந்தது. சிவகார்த்திகேயன் என்கிற நடிகனால், தனியாளாக ஒரு திரைப்படத்தை எடுத்துச் செல்ல முடியுமென அனைவருக்கும் நிரூபித்த திரைப்படம்; தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் மற்றும் திரையரங்க உரிமையாளர்களிடையே சிவாவிற்கென பெரிய demand’இனை ஏற்படுத்தியது இத்திரைப்படமே! (இதற்கிடையே, கால்ஷீட் இல்லாத காரணத்தால் தன் நண்பர் அட்லீயின் முதல் படமான ‘ராஜா ராணி’யில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார் சிவா.) 2013ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான வருடம் ஆகும்; அவருக்கு மூன்று ‘100 நாட்கள்’ வெற்றி திரைப்படங்களையும், எக்கச்சக்க ரசிகர்களையும் கொடுத்தது 2013ஆம் ஆண்டு!

அதற்கு பின்னர், 2014ஆம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே வெளியான ‘மான் கராத்தே’ திரைப்படம் கதையென்று எதுவுமேயில்லாமால் சலிப்பை ஏற்படுத்தும் நகைச்சுவைக் காட்சிகளோடு படு சுமாராக இருந்தது; சிவாவின் கேரியரிலேயே மிக மோசமான திரைப்படம் என்று கூட கூறலாம். ஆனால், அனைத்து எதிர்மறை விமர்சனங்களை எல்லாம் தாண்டியும் இந்த திரைப்படம் ஓரளவு சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியைப் பெற்றது அனைவரையுமே வியப்பில் ஆழ்த்தியது. சிவகார்த்திகேயனுக்காக மட்டுமே இத்திரைப்படம் வெற்றி பெற்றது என கூறலாம். அடுத்ததாக, 2015ஆம் ஆண்டில் தனுஷ்-துரை செந்தில்குமார்-சிவகார்த்திகேயன் கூட்டணியில் இரண்டாம் படமாக ‘காக்கிசட்டை’ வெளியானது; இத்திரைப்படம் சிவாவை முதன்முதலாக ஆக்ஷன் அவதாரத்தில் காட்டியது; கதையைப் பொருத்தவரையில் சுமாராகவே இருந்தாலும், அனைவருக்கும் லாபம் கொடுத்து ‘ஹிட்’ ஆனது. பல முறை தள்ளிப்போடப்பட்டு,  2016ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான ‘ரஜினி முருகன்’ திரைப்படமும் சூப்பர் ஹிட் ஆனது.

தற்பொழுது அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் P.C.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, Weta Workshop,  அனிருத் என மிகப்பெரிய டீமோடு தனது கேரியரின் மிக பிரம்மாண்டமான படமான ‘ரெமோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதற்கடுத்தபடியாக, மோகன் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அதை தொடர்ந்து விக்னேஷ் சிவன், ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிகுமார், அட்லீ என பல இயக்குனர்களுடன் இணைந்து பணிபுரிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் என்கிற சாதாரண இளைஞன் நிச்சயமாக இவ்வளவு பெரிய உயரத்திற்கு சுலபமாக வந்துவிடவில்லை. பல கல்லடிகளையும், வெவ்வேறு காலகட்டத்தில் பல தோல்விகளையும், அவமானங்களையும் சந்தித்து விடாமுயற்சி மற்றும் கடின உழைப்போடுதான் இந்த இடத்தைப் பிடித்திருக்கிறார் சிவா. நடிப்பு, நடனம் என ஒவ்வொரு துறையிலும் தன்னை மெருகேற்றி, தயார்படுத்திக் கொண்டு அடைந்த வெற்றிதான் இது! ‘சிவகார்த்திகேயனுக்கு வந்த அதிர்ஷ்டத்தைப் பார்’ என்கிற ரீதியில் சிலர் பேசுவதெல்லாம், வெறும் பொறாமை மற்றும் அறியாமையே! சினிமாத்துறையில் யார் துணையும் இல்லாமல், தன் திறமையை மட்டும் நம்பி முன்னணி நடிகர் ஆவது என்ன அவ்வளவு சுலபமா?

‘மான் கராத்தே’ திரைப்படம் வெளியாக இருந்த சமயத்தில், சிவகார்த்திகேயனின் சில செயல்களால் ‘சுயவிளம்பரம் தேடுபவர்’, ‘இரவில் குடைபிடிக்கும் புதுப் பணக்காரர்’ என அவரைப் பற்றி பல அவதூறு பேச்சுக்கள் கிளம்பின. பத்திரிக்கை சந்திப்பிற்கு bouncers உடன் வந்தது, ‘ஸ்டார் விஜய்’ தொலைக்காட்சியால் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ என்ற நிகழ்ச்சியில் எக்கச்சக்கமாக விளம்பரப்படுத்தப்பட்டு, தேவையில்லாத பல புகழாரங்கள் சூட்டப்பட்டு தொலைக்காட்சி நேயர்களை கடுப்பேற்றியது என சில விஷயங்கள் மீடியாவில் அதிகளவில் பேசப்பட்டது. தான் சொல்லும் ஹீரோயினை தான் commit செய்ய வேண்டும் என கண்டிஷன் போடுகிறார் சிவகார்த்திகேயன் என்றெல்லாம் பல வதந்திகள் பரவின. கொஞ்சம் சுதாரித்த சிவகார்த்திகேயன், அதன் பின் அந்த மாதிரியான பேச்சுக்கள் எதற்கும் இடம் கொடுக்காதவாறு தன்னை மாற்றிக்கொண்டார். தனுஷுக்கும், சிவாவுக்கும் மனஸ்தாபம், ஈகோ பிரச்சினை என்கிற பொய்யான செய்திகளுக்கெல்லாம் பதில் கூட அளிக்காமல், தாங்கள் இருவரும் நெருக்கமாக இருப்பதை பல முறை நிரூபித்திருக்கிறார். ‘நீங்க அதிக சம்பளம் கேட்குறீங்களாமே!?’ என ஒரு பிரபல பத்திரிக்கையின் பேட்டியில் கேட்டபொழுது, ‘சம்பளத்தைப் பத்தி ஏன் அடிக்கடி பேசுறாங்கன்னு தெரியலை. நான் அதிக சம்பளம் கேட்டிருந்தா தனுஷ், ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ மதன் போல தயாரிப்பாளர்கள் என்னை வெச்சு திரும்ப திரும்ப படம் பண்ணமாட்டாங்க. ஒருவேளை, நான் freeஆ நடிக்கனும்னு ஆசைப்படுறாங்களா? இவனெல்லாம் நடிகன் ஆனதே பெரிய விஷயம், சம்பளம் எதுக்குன்னு நெனச்சிருப்பாங்க போல’ என நகைச்சுவையாக பதிலளித்தார். ஒரு முன்னணி வார இதழின் பேட்டியில் ஒரு பிரபல வாரிசு நடிகர் (தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கும் அந்த வாரிசு நடிகர்), சிவகார்த்திகேயனைப் பற்றி மறைமுகமாக ‘சில நடிகர்கள் எல்லாம் மற்றவர்கள் தோள்களில் பயணித்தே, முன்னேறி விடுகிறார்கள்’ என கேவலமாக தனது வெறுப்பை உமிழ்ந்து கூறினார். அதற்கு கோபமே படாமல், சிவகார்த்திகேயன் ‘அவர் என்னைப் பற்றி சொல்லியிருக்கமாட்டார்; சொல்லியிருந்தாலும், அதைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்?’ என மிக பக்குவமாக பதிலளித்தார்!

யார் என்ன சொன்னாலும், சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஒரு மிக முக்கியமான நட்சத்திர நடிகர். 2011ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சி நடத்திய ‘அவன் இவன்’ சிறப்பு நிகழ்ச்சியில் பயந்து பவ்யமாக நடிகர் விஷாலிடமும், இயக்குனர் பாலாவிடமும் கேள்விகள் கேட்ட இவர், பொங்கல் 2016இல் அவர்களது படங்களான ‘கதகளி’ மற்றும் ‘தாரை தப்பட்டை’யையும் தனது ‘ரஜினி முருகன்’ வெற்றியால் பின்னுக்குத் தள்ளிவிட்டார். 4, 5 வருடங்களுக்கு முன் சிம்புவின் ‘வேட்டை மன்னன்’ திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்க அழைக்கப்பட்ட சிவா, இன்று ரசிகர் பலத்திலும் சம்பளத்திலும் சிம்புவையே முந்திவிட்டார்! தனது அடுத்தடுத்த படங்கள் குறித்து தெளிவாக இருக்கிறார் சிவா, ‘நான் நடிப்பது என்ன மாதிரியான படமாக இருந்தாலும், அதில் கண்டிப்பாக பொழுதுபோக்கு இருக்கும்’ என சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதே போல, ‘நான் ரஜினி, விஜய் போன்ற நடிகர்களை imitate செய்வதாக சிலர் குறை கூறுகிறார்கள். நான் அவர்களது படங்களைப் பார்த்துதான் வளர்ந்தேன்; அவர்களது inspiration கண்டிப்பாக எனக்குள் உண்டு’ எனவும் கூறியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அமைந்ததை போலதொரு ஆசிர்வதிக்கப்பட்ட சினிமா வாழ்க்கை எல்லோருக்கும் அமையாது! தனது முதல் படத்தில் நடிக்கும்போதே அவருக்கு பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என  லட்சக்கணக்கான ரசிகர்கள் (தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம்) இருந்தனர். இப்படி எல்லாத்தரப்பு மக்களையும் கவரத்தான், வளர்ந்து வரும் எல்லா நடிகர்களும் ஏதேதோ செய்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். அது, சிவகார்த்திகேயனுக்கு ஒரு வரம் போல அமைந்துவிட்டது. சிவகார்த்திகேயனின் பெயரே குழந்தைகளையும், பெண்களையும் திரையங்கிற்கு இழுத்து வந்துவிடுகிறது; அதனால் தான் ‘மான் கராத்தே’ போன்ற படங்கள் கூட நஷ்டமில்லாமல் ஓடுகிறது. இப்படியொரு ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஒரு பெரும் கடமை இருக்கிறது, தன் ரசிகர்களுக்கு நல்ல படங்களை மட்டுமே கொடுக்கும் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது! டாஸ்மாக் பாடல், இந்த பொண்ணுங்களே இப்படித்தான்’ ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா’ போன்ற தேவையே இல்லாமல் பெண்களைப் பற்றி பாடும் பாடல்கள், பெண்களைப் பற்றிய ஜோக் போன்றவை எல்லாம் ரசிகர்களை ஏமாற்றி கூட்டம் சேர்க்க நினைக்கும் ஹீரோக்களுக்குத்தான் தேவை; சிவா போல நிலையான பேமிலி ஆடியன்ஸ் உள்ள ஒரு ஹீரோவிற்கு இதெல்லாம் தேவையே இல்லை. ‘மான் கராத்தே’ போன்ற குப்பைப் படங்களில் எல்லாம் நடிப்பதைத் தவிர்த்து, சில சமயம் வித்தியாசமான பொழுதுபோக்குப் படங்களையும் ‘கத்தி’, ‘தனி ஒருவன்’ போல சமூக அக்கறைக் கொண்ட பொழுதுபோக்குப் படங்களையும் தர அவரது comfort zoneஐ விட்டு அவர் வெளியே வரவேண்டும்! (இவரது அடுத்தடுத்த படங்களான ‘ரெமோ’ மற்றும் மோகன் ராஜாவின் படங்கள் அதற்கு பிள்ளையார் சுழி போடும் என நம்பலாம்).

நடிகர் சிவகார்த்திகேயன் 5 அல்லது 10 வருடங்களுக்குப் பிறகு, நிச்சயமாக தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இடத்தில் இருப்பார் என்பதில் சந்தேகமேயில்லை! இன்னும் பற்பல நல்ல பொழுதுபோக்குத் திரைப்படங்களையும், வெற்றிப்படங்களையும் தந்திட சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்கள். This is just the beginning!

பிறந்தநாள் வாழ்த்துக்கள், சிவா..! 🙂

எழுதியவர்: ரஹ்மான்

‘FOLLOW’ us at https://boxofficebossblog.wordpress.com to read more movie reviews & interesting cinema articles… Movie buffs, do subscribe…!!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s