இந்த வார ரிலீஸ் – #மனிதன்

#JollyLLB – 2013ஆம் ஆண்டில் பாலிவுட்டில் வெளியான செம்ம சூப்பரான எண்டர்டைனர்… ரொம்ப சாதரணமான கதையை, ரொம்ப ரொம்ப சுவாரஸ்யமாக சொன்ன படம். இரண்டு வக்கீல்கள், ஒரு நீதிபதி கதாபாத்திரத்தைக் கொண்டு முழு படமும் ஒரு நீதிமன்ற அறைக்குள்ளேயே நடக்கும்… ஒரு சில கமர்ஷியல் சமரசங்கள் இருந்தாலும், கிட்டத்தட்ட 80% திரைப்படத்தை ஒரு court-room’குள்ளேயே அவ்வளவு விறுவிறுப்பாக கொண்டு சென்றிருப்பார் இயக்குனர் சுபாஷ் கபூர்; கிட்டத்தட்ட, இரண்டு மணி நேரம் பொழுது போவதே தெரியாது. 1999இல் நடந்த ஒரு ‘hit & run’ வழக்கை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த பொழுதுபோக்குத் திரைப்படத்திற்கு, சிறந்த இந்தி திரைப்படத்திற்கான ‘தேசிய விருது’ கூட கிடைத்தது. இப்படத்தின் பாத்திரப் படைப்புகள், நடிகர்கள் தேர்வு மற்றும் வசனங்கள் எல்லாமே கனகச்சிதமாக இருக்கும்.

இந்த ‘Jolly LLB’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான், வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் ‘#மனிதன்’ திரைப்படம். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் இரண்டுமே நன்றாகவே இருந்தன. ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்தின் தழுவல், ‘#என்றென்றும்_புன்னகை’ போல ஒரு நல்ல feel-good திரைப்படத்தின் இயக்குனர் அஹமத்தின் அடுத்த திரைப்படம், சந்தோஷ் நாராயணன் இசை என பல காரணங்களால் இத்திரைப்படத்தின் மேல் எனக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. சொல்லப்போனால், உதயநிதியின் நடிப்பில் நான் எதிர்பார்த்திடும் முதல் திரைப்படம் இதுவே!

டிரைலரை பார்த்தவரையில், ஒரிஜினலைக் கெடுக்காத ஒரு நல்ல ரீமேக்காகவே இத்திரைப்படம் இருக்குமென்ற நம்பிக்கையை தந்தது. உதயநிதி’யும் சரியாக underplay செய்திருப்பதைப் போல தெரிகிறது; இன்னும் சொல்லப்போனால் இந்த அப்பாவி வக்கீல் கதாபாத்திரம் இவருக்கு ஒரு ‘tailor made’ ரோல் போல பக்காவாக பொருந்தும் என தோன்றுகிறது. ராதாரவி, பிரகாஷ் ராஜ் இருவருமே சரியான தேர்வு! ‘Star Value’விற்காக சின்ன சின்ன ரோல்களுக்குக் கூட ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், விவேக், பவர் ஸ்டார் என தெரிந்த முகங்களை தேர்வு செய்திருக்கிறார்கள்.

திடீரென, சில படங்கள் மீது ஏனோ எக்கச்சக்க எதிர்பார்ப்பு தொற்றிக்கொள்ளும். அந்த வகையில், ‘மனிதன்’ திரைப்படம் மிக சிறப்பான ஒரு பொழுதுபோக்கு படமாக, நல்ல ரீமேக்காக இருக்குமென பெரும் நம்பிக்கை இருக்கிறது! வெள்ளிக்கிழமை வரை காத்திருப்போம் 🙂

– #ரஹ்மான்

Leave a comment