Tag Archives: Sathriyan

சத்ரியன் – திரைப்பட விமர்சனம்

Sathiriyan - Movie Review (1)
‘சுந்தரபாண்டியன்’
என்கிற சூப்பர் ஹிட் படத்தோடு தன் கேரியரைத் தொடங்கிய இயக்குனர் S.R.பிராபகரன், உதயநிதி ஸ்டாலினுக்காக ‘OK OK’ ஸ்டைலில் எடுத்த ‘இது கதிர்வேலன் காதல்’ திரைப்படம் சுமாராக ஓடியது. நடிகர் விக்ரம் பிரபுவுக்கு தன் முதல் படமான ‘கும்கி’ படத்திற்கு பிறகு, சொல்லிக்கொள்ளும்படி பெரிய ஹிட் எதுவுமே இல்லை. ‘இது என்ன மாயம்’, ‘வாகா’, வீர சிவாஜி’ என சமீபத்திய ரிலீஸ்கள் எல்லாமே படுதோல்வி அடைந்தது. விக்ரம் பிரபு, இயக்குனர் பிராபகரன் என இருவருக்குமே கண்டிப்பாக தங்கள் கேரியரில் ஒரு பெரிய ஹிட் தேவைப்படும் இந்நிலையில், ‘சத்ரியன்’ அவர்களுக்கு கை கொடுக்குமா?

*** Mild Spoilers Ahead ***

திருச்சி மாநகரமே பார்த்து அஞ்சிடும் ரவுடியான குணா (விக்ரம் பிரபு) தன் காதலி நிரஞ்சனாவுக்காக (மஞ்சிமா மோகன்) தன் தொழிலையும் வன்முறையையும் கைவிட்டு திருந்த முயற்சிக்கும்பொழுது, எதிரிகள் மூலம் அவருக்கு பல பிரச்சினைகள் வருகிறது. அவற்றை சமாளிக்க மீண்டும் வன்முறையை கையில் எடுக்கும் விக்ரம் பிரபு அதிலிருந்து மீண்டு வருகிறாரா இல்லையா என்பது தான் ‘சத்ரியன்’ படத்தின் கதை.

காதலுக்காக திருந்தும் ரவுடி என்கிற ஹைதர் காலத்து கதையை, நாம் தமிழ் சினிமாவில் குறைந்தபட்சம் 200 படங்களிலாவது பார்த்திருப்போம் இல்லையா? அதையே இன்னொரு முறை தன் பங்குக்கு எடுத்திருக்கிறார் இயக்குனர் S.R.பிராபகரன். அதை கொஞ்சம் சுவாரஸ்யமாக சொல்லியிருந்தாலாவது, தேவலாம். ஆனால், அதுவும் இல்லை. படம் ஆரம்பித்து 5 நிமிடங்களில், வில்லன்களுக்கு கொடுக்கப்படும் அறிமுக பில்டப்பிலேயே நமக்கு போரடித்துவிடுகிறது.

அதைத் தாண்டி… படம் நெடுக பார்த்து பார்த்து சலித்துப் போன பழைய காட்சிகளும், எளிதில் கணிக்கக்கூடிய டிவிஸ்ட்களும், கிளிஷேக்களும், தூக்கத்தை வரவழைக்கும் வசனங்களும், எந்தவித ஈர்ப்பையும் ஏற்படுத்தாத பாடல்களும் சண்டைக்காட்சிகளும் காமெடியுமே படம் முழுக்க நிறைந்து கிடக்கிறது. பேசிக்கொண்டே இருக்கும் வில்லன்கள், பில்டப் மட்டுமே கொடுக்கும் ஹீரோ, 1990 சினிமாக்களில் வருவதைப் போல ‘நல்ல போலீஸ்’ என்கிற பெயரில் வரும் ‘மொக்கை போலீஸ்’, ஹீரோ இருக்கும் இடம் தெரியும் என்று சொல்லியும் ஹீரோ பிரண்டை ஒன்றும் செய்யாமல் விடும் லூசு வில்லன் என படத்தின் குறைகளை சொல்லிக்கொண்டே போகலாம். மொத்த படத்திலும், ஞாபகம் வைத்துக்கொள்ளும்படி ஒரேயொரு காட்சி கூட இல்லை. அரங்கத்திலிருந்த மொத்த ரசிகர்களுமே ‘எப்போடா இண்டர்வெல் வரும், எப்போதான் படம் முடியும்?’ என காத்திருப்பதையும் கிண்டலடிப்பதையும் பார்க்க முடிந்தது.

படத்தின் பிரதான கதையான கோஷ்டி மோதல், யார் திருச்சியை ஆள்வது என்கிற போட்டியிலேயே ஒரு சுவாரஸ்யமும் இல்லாதபொழுது டாக்டராக வரும் கவின், அவர் காதலியாக வரும் ஐஸ்வர்யா தத்தா என பல கிளைக்கதைகள் எதற்கு? நேரத்தைக் கடத்தவா? குணா மீது நிரஞ்சனாவுக்கு காதல் வரும் காட்சி, வன்முறை வேண்டாம் என நிரஞ்சனா சொல்லும் காட்சி, தன் காதல் பற்றி ரவியிடம் குணா சொல்லும் காட்சி, நிரஞ்சனா வீட்டிற்கே சென்று அவள் அம்மாவிடம் குணா பேசும் காட்சி என படத்தின் முக்கிய காட்சி எதிலுமே கொஞ்சம் கூட வலுவில்லை. காட்சியை மேலும் ரசனைக்குறியதாக ஆக்க வேண்டிய வசனங்கள் எல்லாம், பொறுமையை சோதிக்கும்படியே இருந்தன. அதிலும் கிளைமாக்ஸில் வில்லனையும், எதிர்கோஷ்டியில் இருக்கும் தன் நண்பனையும் ஹீரோ பேசியே திருத்தும் வசனங்களெல்லாம் ‘ஐய்யோ சாமி முடியல’ ரகம்! மொத்த படத்தில் ஒரேயொரு ஆறுதல் என்றால், அது நாயகி மஞ்சிமா மோகன் தான். ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை விட இதில் சற்றே எடை குறைவாகவும், திருச்சி பெண்ணாக சுடிதாரில் ரொம்பவே அழகாகவும் தோன்றியிருக்கிறார்.

இது தான் அடுத்த நடக்கப்போகிறது என கணிக்கக்கூடிய இது போன்ற மசாலா திரைப்படங்களில் ஒரு இயக்குனர் ஸ்கோர் செய்யக்கூடிய ஏரியாக்களே திரைக்கதை, வசனம் மற்றும் மேக்கிங் தான். அவை எல்லாவற்றிலும் ‘தேமே’ என கோட்டைவிட்டு விட்டார் இயக்குனர். இப்படியொரு கதையை கொண்ட படத்தின் திரைக்கதையை, இயக்குனர் ஏன் நத்தை வேகத்தில் அமைத்திருக்கிறார் என தெரியவில்லை.

எல்லா படங்களிலும் இதே போல ஒரே மாதிரியான விறைப்பான ரியாக்ஷன்களை மட்டும் கொடுத்துக்கொண்டு இன்னும் எத்தனை நாள் காலம் தள்ளப்போகிறாரோ நடிகர் விக்ரம் பிரபு? தாத்தா அளவுக்கு இல்லாவிட்டாலும், அப்பா அளவிற்காவது நடிக்க வேண்டாமா? ஒரு சில காட்சிகளே வந்தாலும் கூட, கவின் நிறைவாக நடித்திருக்கிறார். படத்தில் ஹீரோவின் காட்பாதர் போல ரவி என்கிற ஒரு கதாபாத்திரம் வருகிறது – அந்த கதாபாத்திரத்தில் விஜய் முருகனை ஏன் நடிக்க வைத்தார்கள் என தெரியவில்லை. கொஞ்சமும் செட் ஆகாத அவர், மிகப்பெரிய மைனஸ் ஆக இருக்கிறார். தாரா போன்ற திறமையான ஒரு நடிகை ரொம்பவே சின்ன ரோலில் வீணடிக்கப்பட்டிருக்கிறார். யோகி பாபு கூட ஏன் வருகிறோம், போகிறோம் என்றே தெரியாதபடி இரண்டே காட்சிகளில் வந்து போகிறார். டெக்னிக்கல் அம்சங்களில் சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு ஈர்க்கிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் ஒரு பாடல் கூட கேட்கும்படி இல்லை; பின்னணி இசை ஆங்காங்கே கவனம் ஈர்த்தாலும், பெரிதாக கவரும்படி எதுவுமே இல்லை. யுவனுக்கு என்னதான் ஆச்சு? அது சரி, இப்படியொரு படத்தில் யுவனை மட்டும் குத்தம் சொல்லி என்ன ஆகப்போகிறது?

‘சத்ரியன்’ என்கிற இந்த படத்துக்கு முதலில் வைத்த பெயர் ‘முடிசூடா மன்னன்’… அப்படியே விட்டிருக்கலாம், ‘சத்ரியன்’ என்கிற டைட்டிலாவது தப்பியிருக்கும்! :/

ரஹ்மான்

‘FOLLOW’ us at https://boxofficebossblog.wordpress.com to read more movie reviews & interesting cinema articles… Movie buffs, do subscribe…!!

Sathiriyan - Movie Review (3)

 

Advertisements